×

கழுகுமலையில் பங்குனி உத்திர திருவிழா; சுவாமி கழுகாசலமூர்த்தி பச்சை மலர்சூடி கிரி வீதியுலா: நாளை காலை தேரோட்டம்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் 8ம் நாளான இன்று அதிகாலை சுவாமி கழுகாசலமூர்த்தி,  திருமால் அம்சமாக பச்சை சாத்தி அலங்காரத்தில்  வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா  கடந்த 27ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை  கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு நாள் காலை, மற்றும் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.  பங்குனி உத்திர திருவிழாவின் 7ம் நாளான நேற்று மாலை 4மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்ச(ருத்திரர்) வீதியுலாவும், வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்ச வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து 8ம் திருநாளான இன்று (திங்கள்) அதிகாலை 6 மணிக்கு பச்சை சாத்தி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இரவு 8 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.  

இந்நிகழ்ச்சி தை மற்றும் பங்குனி மாதத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சண்முகர் சிவன் மற்றும் பிரம்மன், திருமால் அம்சமாக காட்சி தருகிறார். இதனால், கோவில் நடை இரவு முழுவதும் அடைக்காமல் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இதில் ரெட்டியார் சமுதாய நிர்வாகி மகேஸ்வரன், மற்றும் தொழிலதிபர் கந்தசாமி, கழுகுமலை ரெட்டியார் மண்டப நிர்வாகி ராமசாமி, முருகன், காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், குமரெட்டியாபுரம், வள்ளிநாயகபுரம் வட்டார ரெட்டி சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.  சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நாளை (செவ்வாய்)  காலை 7 மணிக்கு மேல்   நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.

Tags : Panguni Utra Festival ,Kalgukumalai ,Swami , Panguni Utra Festival at Kalgukumalai; Swami Kalgakasalamurthy green garland Giri Vethiula: Chariot procession tomorrow morning
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்